கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் ரத்து: புகார் பெட்டியில் மனுக்களை செலுத்திய பொதுமக்கள்
குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுக்களை விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் போட்டு சென்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஜமாபந்தி முடியும் வரை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதன் அடிப்படையில் திங்கட்கிழமையான இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழக்கம்போல் நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறவில்லை. இருப்பினும் பொதுமக்கள், தங்கள் கோரிக்கை மனுக்களை செலுத்த ஏதுவாக கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், தங்கள் கோரிக்கை மனுக்களை அந்த புகார் பெட்டியில் செலுத்தினர். ஜமாபந்தி முடிந்ததும் இந்த புகார் பெட்டி திறக்கப்பட்டு அதிலிருக்கும் கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காணப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.