பொதுமக்கள் 378 மனுக்களை அளித்தனர்

கோத்தகிரி, பந்தலூரில் நடந்த ஜமாபந்தி முகாமில் பொதுமக்கள் 378 மனுக்களை அளித்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

Update: 2023-06-22 19:30 GMT

கோத்தகிரி

கோத்தகிரி, பந்தலூரில் நடந்த ஜமாபந்தி முகாமில் பொதுமக்கள் 378 மனுக்களை அளித்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஜமாபந்தி முகாம்

தமிழகத்தில் வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும், கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரிக்கும் கணக்குகளை ஆய்வு செய்யவும் ஜமாபந்தி முகாம் நடத்தப்படுகிறது. கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய முகாமிற்கு ஜமாபந்தி அலுவலரும், மாவட்ட டாஸ்மாக் மேலாளருமான கண்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கீழ் கோத்தகிரி வருவாய் வட்டத்துக்கு உட்பட்ட பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 30 மனுக்கள் பெறப்பட்டன.

கோரிக்கை மனுக்கள்

இதையடுத்து நேற்று நெடுகுளா வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 145 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மேல் நடவடிக்கைக்காக சம்பந்தபட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இன்று(வெள்ளிக்கிழமை) கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கான முகாம் நடைபெறுகிறது. இதில் நீலகிரி மாவட்ட தலைமை பொறுப்பாளர் (ஆயம்) சிவக்குமார், கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, சமூக நலதிட்ட தாசில்தார் மகேஸ்வரி, பழங்குடியினர் தாசில்தார் மகேஸ்வரி, துணை தாசில்தார் சதிஷ் நாயக், நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பந்தலூர்

இதேபோன்று பந்தலூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி முகாமிற்கு கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் கோமதி, பந்தலூர் தாசில்தார் நடேசன், நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் லதா, துணை தாசில்தார்கள் குமார், ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர்கள் லட்சுமி சங்கர், விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 41 பேருக்கு முதியோர் மற்றும் ஈமச்சடங்கு திருமணம் உள்ளிட்ட 4 லட்சத்திக்கான உதவித்தொகையை ஆர்.டி.ஓ. வழங்கினார்.முகாமில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 203 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள். இவை அந்தந்த துறைக்கு அனுப்பபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்