பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

Update: 2023-04-28 18:45 GMT

கோவை

வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-

செல்போன்கள் ஒப்படைப்பு

காணாமல் போன 170 செல்போன்கள் தனிப்படை போலீசாரால் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் ஆகும். இது தவிர பீளமேடு போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த கொள்ளை தொடர்பாக முக்கியமான குற்றவாளி கைது செய்யப்பட்டு அவர் மீது 6 வழக்குகள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவரிடம் இருந்து 56 பவுன் தங்க நகைகள், ரூ.25 லட்சம் பணம், ஒரு கார் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்காணிப்பு

கோடை விடுமுறை காரணமாக பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். பூட்டி இருக்க கூடிய வீடுகள் கண்காணிக்கப்படுகின்றன. பொதுமக்கள் ஊர்களுக்கு செல்லும் போது போலீஸ் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.கோவையில் முக்கியமான பகுதிகள், மிகவும் பதற்றமான பகுதிகள் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

கோவை மாநகரில் உள்ள குற்றவாளிகளை கண்காணிக்கவும், உடனடியாக அடையாளம் காணவும், குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் ஆக்டோபஸ் என்கிற புதிய மென் பொருள் உதவுகிறது. இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது போலீஸ் துணை கமிஷனர் சந்தீஸ் உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்