விபத்து ஏற்படுத்திய டிரைவரை கோவிலுக்குள் பூட்டி சிறை வைத்த பொதுமக்கள்

விபத்து ஏற்படுத்திய டிரைவரை கோவிலுக்குள் பூட்டி சிறை வைத்த பொதுமக்கள்

Update: 2022-11-27 18:45 GMT

நாகூரில், கார் ேமாதி பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை பொதுமக்கள் பிடித்து கோவிலுக்குள் பூட்டி சிறை வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலம் கட்டுமான பணிகள்

நாகையை அடுத்த நாகூர் கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் நாகூர் வழியாக பொது போக்குவரத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நாகூரில் உள்ள சிவன் மேலவீதி, சிவன் கீழ வீதி, ஆஸ்பத்திரி சாலை வழியாக வாகனங்கள் சென்று வருகிறது. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது.

கார் மோதி பெண் உள்பட 2 பேர் படுகாயம்

நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக வந்த ஒரு கார் மோதியதில் நாகூர் செம்மரக்கடை தெருவை சேர்ந்த ஜெய்னுலாபுதீன் மனைவி ரோஷினி(வயது 22), தரங்கம்பாடி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ்(35) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த பெண் உள்பட இருவரும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டிரைவரை கோவிலுக்குள் பூட்டி சிறைவைத்தனர்

அதனை கண்ட அந்த பகுதி மக்கள் வேகமாக வந்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் லூயிஸ் டேவிட்டை(32) பிடித்து அங்குள்ள கோவிலின் உள்ளே பூட்டு போட்டு பூட்டி சிறை வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

போலீசார் மீட்டனர்

அங்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டிரைவரை மீட்டடனர். இந்த விபத்து குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து ஏற்படுத்திய டிரைவர் பொதுமக்கள் பிடித்து கோவிலுக்கு பூட்டி சிறை வைத்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்