பொதுவினியோக திட்டத்தை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

பொதுவினியோக திட்டத்தை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என கு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.

Update: 2023-01-07 18:45 GMT

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கும், ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். உள்ளாட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் உள்பட அனைத்து துறைகளிலும் பணிபுரியும் கீழ்நிலை ஊழியர்களுக்கு தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், தினக்கூலி வழங்கப்படுகிறது. தொகுப்பூதியம் பெறும் ஆசிரியர்களும் அதிகளவில் இருக்கின்றனர். அதனால் அனைவருக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது வினியோக திட்டத்தை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். அரசின் வருவாயில் கணிசமான தொகை டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலமாக தான் கிடைக்கிறது. ஆனால் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கடந்த 19 ஆண்டுகளாக தொகுப்பூதியமே பெற்று வருகின்றனர். எனவே டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரப்படுத்தி, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். மேலும் செவிலியர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (பிப்ரவரி) 9-ந் தேதி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டமும், மார்ச் மாதம் 2-ந் தேதி வேலை நிறுத்த போராட்டமும் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அரசு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சிவக்குமார், டாஸ்மாக் சங்க மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், அரசு பணியாளர்கள் சங்க அமைப்பு செயலாளர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்