கடலூர் மாவட்டத்தில்களை கட்டிய காணும் பொங்கல் குடும்பத்துடன் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர்

கடலூர் மாவட்டத்தில் காணும் பொங்கல் களைகட்டியது. இதில் பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்.

Update: 2023-01-17 18:45 GMT

பொங்கல் பண்டிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதற்கு மறுநாள் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நேற்று காணும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலையொட்டி மக்கள் சுற்றுலா தலங்களுக்கும், பொழுதுபோக்கு மையங்களுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பது வழக்கம்.

அதன்படி நேற்று கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று மக்கள் காணும் பொங்கலை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினர்.

நடராஜர் கோவில்

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம், கிள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்று தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு படையெடுத்து வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் முன்பு அமர்ந்து தங்களது வீடுகளில் இருந்து எடுத்து வந்திருந்த மதிய உணவை குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறுவர்கள் சிலம்பம், கபடி, கோ-கோ போன்ற விளையாட்டுகளை விளையாடினர். பெண்கள், சிறுமிகள் கும்மியடித்தும், கோலாட்டம் ஆடியும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

இதனை கோவிலுக்கு வந்திருந்த திரளான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர். இதேபோல் விருத்தாசலம் மணிமுக்தாற்றிலும் காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில் சிறுவர்-சிறுமியர் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பெண்களும் கும்மியடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

சில்வர் பீச்

இதேபோல் கடலூர் மாநகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலையில் கடலூர் சில்வர் பீச்சுக்கு படையெடுத்து சென்றனர். இதனால் சில்வர் பீச்சில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் வாகனங்களில் சென்றவர்களை போலீசார், தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரி அருகில் தடுத்து நிறுத்தி, வாகனங்களை அங்குள்ள வளாகத்தில் நிறுத்தி விட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

பின்னர் பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக அமர்ந்து தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை பகிர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். பலர் கடலில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்