குளத்தில் தண்ணீர் எடுத்த லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்
பாவூர்சத்திரம் அருகே குளத்தில் தண்ணீர் எடுத்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.;
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ளது நாகல்குளம். இந்த குளத்தில் இருந்து நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிக்காக தினந்தோறும் அதிகப்படியான லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று அதனை ரோடுகளில் தெளிக்க பயன்படுத்தி வந்தனர். இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குளத்திற்கு தண்ணீர் எடுக்க வந்த லாரியை சிறை பிடித்தனர். தண்ணீர் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் உடனடியாக வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் லாரியில் நிரப்பப்பட்ட தண்ணீர், மீண்டும் குளத்தில் திறந்து விடப்பட்டது. மேலும் தொடர்ந்து இந்த குளத்தில் சாலை பணிகளுக்கு தண்ணீர் எடுக்க மாட்டோம் என்று ஒப்பந்தக்காரர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.