காட்டு யானைகள் ஊருக்குள் வரும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்
கூடலூர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் காட்டு யானைகள் தாக்கி 48 பேர் பலியாகி உள்ளனர். யானைகள் ஊருக்குள் வரும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் காட்டு யானைகள் தாக்கி 48 பேர் பலியாகி உள்ளனர். யானைகள் ஊருக்குள் வரும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
48 பேர் பலி
கேரள மாநிலம் நிலம்பூர் வனத்தில் இருந்து தமிழகத்தின் கூடலூர், பந்தலூர், முதுமலை, கர்நாடகாவின் பந்திப்பூர் வனம் வழியாக சத்தியமங்கலத்துக்கு காட்டு யானைகள் ஒவ்வொரு கால கட்டங்களில் உணவு தேவைக்காக இடம்பெயர்ந்து செல்கின்றன. ஒரு யானைக்கு தினமும் சராசரியாக 250 கிலோ பசுந்தீவனம் தேவைப்படுகிறது. 2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 2,761 யானைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் கூடலூர், முதுமலையில் 400 காட்டு யானைகள் உள்ளன.
இந்தநிலையில் யானை வழித்தடங்கள் அழிப்பு, வனத்தில் பசுந்தீவன தட்டுப்பாடு உள்பட பல்வேறு காரணங்களால் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் வருகிறது. இதனால் வனவிலங்கு-மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. குறிப்பாக கூடலூர், பந்தலூர் மற்றும் மசினகுடி பகுதியில் காட்டு யானைகள் தாக்கி விவசாயிகள் தோட்ட தொழிலாளர்கள் பலியாகி வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு முதல் இதுவரை 5 ஆண்டுகளில் 48 பேர் பலியாகி உள்ளனர்.
தொலைநோக்கு திட்டங்கள்
யானைகள் தாக்குதலில் இருந்து தப்பிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். அவைகள் ஊருக்குள் வரும் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைத்த பாடில்லை.
இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறும்போது, காட்டு யானைகள் இயற்கையாகவே சாதுவான குணம் கொண்டவை. பசுந்தீவனத்தை தேடி ஊருக்குள் வரும்போது மனித-வனவிலங்கு மோதல்கள் ஏற்படுகிறது. இதன் காரணமாக எதிரில் வரும் மனிதர்களை காட்டு யானைகள் அச்சத்தில் தாக்கி விடுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தொலைநோக்கு திட்டங்களை வனத்துறை செயல்படுத்த வேண்டும் என்றனர்.
100 சதவீத மானியத்தில் மின்வேலி
கூடலூர் முன்டக்குன்னு விவசாயி ஆனந்த்:-
நேந்திரன் வாழை, நெல் விவசாயம் செய்து வந்த நிலையில், காட்டு யானைகள் விளைநிலத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. மேலும் அறுவடைக்கு தயாராக இருக்கும் வாழைத்தார்கள் வீணாகியது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வாழை விவசாயம் மேற்கொள்ளவில்லை. யானைகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க விவசாய நிலத்தை சுற்றிலும் சூரிய சக்தி மின் வேலி அமைக்க திட்டமிட்டு, அதிகாரிகளிடம் முறையிட்டேன்.
தற்போது 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இதனால் மின்வேலி அமைக்க 100 சதவீத மானியம் வழங்க வேண்டும். காட்டு யானைகளால் சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தொகை நீண்ட காலம் கழித்து குறைவாகவே வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் அகழி தோண்டுவது வீண் செலவு. அதற்குப் பதிலாக 100 சதவீத மானியத்தில் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பசுந்தீவனம் வளர்க்க வேண்டும்
ஓவேலியை சேர்ந்த கேதீஸ்வரன்:-
நில ஆக்கிரமிப்பு தொடர்பாகவே வனவிலங்கு தாக்குதல்கள் அதிகரித்து உள்ளதாக வனத்துறை கூறுகிறது. ஆனால், அடர்வனங்களில் வனவிலங்குகளுக்கான தீவனங்கள் இல்லை. அதனை பயிரிட்டு பராமரிக்க வேண்டிய வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் யானைகள் குப்பைத் தொட்டிகளில் உணவை தேடுவதும், சாலையோரம் குரங்குகள் வாகனங்களில் வருவோரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.
உணவு தேவையை பூர்த்தி செய்யவே மக்களின் வாழ்விடங்களை நோக்கி வனவிலங்குகள் இடம் பெயர்கின்றன. அதற்காக ஆண்டுதோறும் வனவிலங்குகள் பராமரிப்பிற்காக ஒதுக்கும் நிதியை முறையாக பயன்படுத்தி வனப்பகுதிகளில் பசுந்தீவனங்களை பயிரிட்டு வளர்க்க வனத்துறை முன் வர வேண்டும்.
மூங்கில் காடுகள்
பந்தலூர் நவுசாத் கூறியதாவது:-
யானைக்கான உணவு வனத்தில் இல்லை. யானைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மூங்கில். தற்போது வனப்பகுதியில் 90 சதவீதம் மூங்கில் அழிந்து விட்டது. அவற்றை மீண்டும் உற்பத்தி செய்ய மூங்கில் காடுகளை உருவாக்க வேண்டும். அதுபோல் பலா, திப்பிலி, கரும்பு, ஓடை, தாகை போன்றவை வனத்தில் இல்லை. இவற்றை வனப்பகுதியில் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முக்கியமான வழித்தடங்கள் சில முதலாளிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இவை வழித்தடத்தில் இருந்து யானை வேறு திசைக்கு மாற காரணமாகும்.
யானை வழித்தடத்தில் உள்ள கட்டிடங்கள், தோட்டங்களை எந்தவித சமரசமும் இன்றி அப்புறப்படுத்த வேண்டும். அதன்முலம் யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க முடியும். உன்னி செடிகளால் யானைக்கு ஒவ்வாமை ஏற்படுவதோடு பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். இதனால் பார்த்தீனியம், உன்னி செடிகள் இல்லாத தோட்டங்களில் உலா வருகின்றன. களை செடிகளை அகற்ற ஆண்டுக்கு ரூ.400 கோடி வரை வனத்துறைக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த பணம் மூலம் இவை அகற்றப்படாமல் இருப்பது வேதனையான விஷயம்.
அகலமான அகழி வேண்டும்
கூடலூர் லாரஸ்டன் சகாதேவன்:-
ஓவேலி பேரூராட்சி அலுவலகம் மற்றும் அருகே உள்ள நூலகம், தபால் அலுவலகம், பள்ளிக்கூடத்தை காட்டு யானைகள் உடைத்து நொறுக்கியது. கூடலூரில் கடந்த 4 மாதங்களில் 6 பேர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தனர். உணவு கிடைக்காமல் ஊருக்குள் வரும் காட்டு யானைகள், வீடுகளில் வைத்திருக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களை தின்று பழகிவிட்டது.
இதன் காரணமாக பொதுமக்களின் வீடுகள், மளிகை மற்றும் ரேஷன் கடைகளை பார்த்து தினமும் சேதப்படுத்தி வருகின்றன. காட்டு யானைகள் கிராமத்துக்குள் வருவதை தடுப்பதற்கு வனப்பகுதிகளில் வளர்ந்து உள்ள பார்த்தீனியம், உன்னி செடிகளை அகற்றினால் தேவையான உணவு காட்டுக்குள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் சோலார் மின்வேலிகள் அமைத்தும், அகலமான அகழிகளை தோண்டியும் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கலாம். இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளை அரசு சிறப்பு கவனம் செலுத்தி எடுக்க வேண்டும்.