தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கி இடைநிலை ஆசிரியர்களின் சிக்கலை தீர்க்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்

தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கி இடைநிலை ஆசிரியர்களின் சிக்கலை தீர்க்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.;

Update: 2023-09-26 18:42 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றும் இரு பிரிவினருக்கு இடையிலான ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 28-ந் தேதி முதல் போராட்டம் அறிவித்துள்ளனர். வருங்காலத் தலைமுறையினருக்கு பாடம் நடத்த வேண்டிய ஆசிரியர்களை சாலையில் இறங்கி போராட்டம் நடத்தும் கட்டாயத்திற்கு தள்ளுவதை ஏற்க முடியாது.

31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படை ஊதியமும், ரூ.2,800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், 01.06.2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2,800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. அப்போது அடிப்படை ஊதியத்தில் ரூ.4100 என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் ரூ.16,000-க்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது.

இதே கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 25, 26-ந் தேதிகளில் சென்னையில் போராட்டம் நடத்திய போது, அவர்களை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை நன்கு உணர்ந்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் அவர்களின் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கி சிக்கலைத் தீர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்