சேலத்தில் காய்கறிகள் விலை 'கிடுகிடு' உயர்வு
சேலத்தில் காய்கறிகள் விலை 'கிடுகிடு'வென உயர்ந்துள்ளது.
சேலம்,
சேலத்தில் காய்கறிகள் விலை 'கிடுகிடு'வென உயர்ந்துள்ளது.
விலை உயர்வு
சேலம் மாவட்டத்தில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரையும், வெளி மார்க்கெட்டுகளில் ரூ.120 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே மற்ற காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக உழவர் சந்தைகளில் கடந்த மாதம் கிலோவுக்கு ரூ.70 வரை விற்ற பச்சை மிளகாய் நேற்று ரூ.110-க்கு விற்பனையானது.
இதேபோல் கடந்த வாரம் ரூ.28-க்கு விற்ற உருளைக்கிழங்கு நேற்று ரூ.60-க்கும், கிலோ ரூ.35-க்கு விற்ற கத்தரிக்காய் நேற்று ரூ.48-க்கும், ரூ.95-க்கு விற்ற பீன்ஸ் நேற்று ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.70-க்கும், பீட்ரூட் ரூ.60-க்கும், கேரட் ரூ.76-க்கும் பெரிய வெங்காயம் ரூ.26-க்கும், முள்ளங்கி ரூ.26-க்கும், அவரை ரூ.80-க்கும், முட்டைக்கோஸ் ரூ.30-க்கும் விற்பனையானது.
வரத்து குறைவு
இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறும் போது, பருவ நிலை மாற்றம் காரணமாக தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் உள்ளிட்ட சில காய்கறிகள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் உழவர் சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் விலை அதிகரித்து காணப்படுகிறது. காய்கறிகள் வரத்து அதிகரிக்க தொடங்கிய பின்னர் தான் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.