சின்ன வெங்காயம் விலை சதம் அடித்தது
புதுக்கோட்டையில் சின்ன வெங்காயம் விலை சதம் அடித்தது. கொத்தமல்லி தழையும் கிலோ ரூ.100 ஆக உயர்ந்தது.;
சின்ன வெங்காயம்
வெங்காயத்தின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சற்று குறைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. வரத்து குறைவால் அதன் விலை தொடர்ந்து உயருகிறது.
இந்த நிலையில், புதுக்கோட்டையில் சின்ன வெங்காயத்தின் விலை நேற்று கிலோ ரூ.100 ஆக உயர்ந்திருந்தது. உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.90-க்கு விற்றது. மழையின் காரணமாக விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவால் விலை இன்னும் உயரும் என கூறப்படுகிறது. இதேபோல பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.55-க்கு விற்றது.
கொத்தமல்லி தழை
இதேபோல கொத்தமல்லி தழை கிலோ ரூ.100 ஆக உயர்ந்திருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதன் விலை ரூ.40 முதல் ரூ.60 வரைக்கும் விற்றது. பொதுவாக கொத்தமல்லி தழையை கிலோ கணக்கில் பொதுமக்கள் அதிக அளவில் வாங்குவது கிடையாது. ஓட்டல்களில் சமையலுக்கு பயன்படுத்துவோர், மொத்தமாக உணவு தயாரிக்கப்படுகிற நேரங்களில் சமையல் தேவைக்காக வாங்கப்படுவது உண்டு. கடைகளில் மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்கும் போது கொசுறாக கொத்தமல்லி தழையை வியாபாரிகள் கொடுப்பது உண்டு. ஆனால் தற்போது விலையேற்றம் காரணமாக கொத்தமல்லி கொசுறாக கொடுக்கப்படுவதற்கு பதிலாக அதற்கும் குறிப்பிட்ட விலையை வைத்து வியாபாரிகள் விற்கின்றனர்.
விலை விவரம்
புதுக்கோட்டை உழவர்சந்தையில் விற்பனையான காய்கறிகளில் சிலவற்றின் விலை விவரம் கிலோ கணக்கில் வருமாறு:-
கத்தரிக்காய் ரூ.60-க்கும், தக்காளி ரூ.20-க்கும், வெண்டைக்காய் ரூ.30-க்கும், புடலங்காய் ரூ.25-க்கும், பீர்க்கங்காய் ரூ.40-க்கும், பாகற்காய் ரூ.50-க்கும், சுரைக்காய் ரூ.18-க்கும், அவரைக்காய் ரூ.70-க்கும், கொத்தவரங்காய் ரூ.25-க்கும், முள்ளங்கி ரூ.50-க்கும், முருங்கைக்காய் ரூ.80-க்கும், உருளைகிழங்கு ரூ.60-க்கும், கேரட் ரூ.40-க்கும், பீட்ரூட் ரூ.30-க்கும், பீன்ஸ் ரூ.80-க்கும், முட்டைகோஸ் ரூ.20-க்கும் விற்றது.