திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடு, கிடு உயர்வு

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில், ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கிடு, கிடுவென உயர்ந்தது.

Update: 2023-10-21 17:35 GMT

ஆயுதபூஜை

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதேபோல் வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்களில் ஆயுதபூஜை நடத்தப்படும். இந்த ஆயுதபூஜை வழிபாட்டில் பூக்கள் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த பூக்கள், அதிகமாக பயிரிடப்படும் மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். திண்டுக்கல், நிலக்கோட்டை ஆகிய பூ மார்க்கெட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் ஆயுதபூஜை நாளை கொண்டாட இருப்பதையொட்டி வெளியூர் வியாபாரிகள் நேற்றே பூக்களை வாங்குவதற்கு மார்க்கெட்டுகளுக்கு குவிந்தனர். திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை நேற்று களை கட்டியது. ஒரே நாளில் மார்க்கெட்டுக்கு 20 டன்களுக்கு மேல் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

பூக்கள் விலை உயர்வு

கடந்த புரட்டாசி மாதத்தில் பூக்கள் விற்பனை ஆகாததால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் நேற்று மல்லிகை, சம்பங்கி, அரளி, செண்டுமல்லி உள்பட அனைத்து வகையான பூக்களை கொண்டு வந்து குவித்தனர். எனினும் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு பூக்களை வாங்கியதால் விலை கிடு கிடுவென உயர்ந்தது.

அதன்படி நேற்றைய தினம் திண்டுக்கல்லில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,200-க்கும், முல்லைப்பூ மற்றும் காக்கரட்டான் தலா ரூ.600-க் கும், சாதிப்பூ மற்றும் அரளிப்பூ தலா ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும், ரோஜா ரூ.200-க்கும், செண்டுமல்லி ரூ.70-க்கும், கோழிக்கொண்டை ரூ.50-க்கும் விற்பனை ஆனது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பூக்களின் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்