மீன்கள் விலை கிடு,கிடு உயர்வு

திருவாரூரில் மீன்கள் விலை கிடு,கிடுவென உயர்ந்து காணப்பட்டது. 1 கிலோ வஞ்சிரம் ரூ.800-க்கும் விற்பனையானத

Update: 2023-01-14 18:45 GMT

திருவாரூரில் மீன்கள் விலை கிடு,கிடுவென உயர்ந்து காணப்பட்டது. 1 கிலோ வஞ்சிரம் ரூ.800-க்கும் விற்பனையானது.

மீன் விற்பனை

பண்டிகை என்றாலே பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவு தான் சமைக்கப்படும். மீன், ஆடு, கோழி இறைச்சி இல்லாத அசைவ உணவுகளே இருப்பதில்லை. பண்டிகை காலங்களில் எப்போதும் இறைச்சி விற்பனை அதிகளவில் இருக்கும். அதன்படி இன்று பொங்கல் பண்டிகை என்பதால் நேற்று திருவாரூரில் மீன் விற்பனை மும்முரமாக நடந்தது. திருவாரூர் நகரில் ஏராளமான மீன் கடைகள் உள்ளன. இந்த மீன் கடைகளுக்கு நாகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

1 கிலோ வஞ்சிரம் ரூ.800

மீன்கள் வரத்து எப்போதும் போல் இருந்தாலும் அதன் விலை நேற்று கிடு, கிடுவென உயர்ந்து காணப்பட்டது. ரூ.250-க்கு விற்ற சங்கரா மீன் ரூ.400-க்கும், ரூ.600-க்கு விற்ற வஞ்சிரம் ரூ.800-க்கும், ரூ.350-க்கு விற்ற கொடுவா மற்றும் பாறை மீன் ரூ.500-க்கும், ரூ.200-க்கு விற்ற திருக்கை மீன் ரூ.300-க்கும் விற்பனையானது. மேலும் மத்தி மீன், வவ்வால் மீன்களின் விலைகளில் மாற்றம் இல்லாமல் ரூ.100, ரூ.500-க்கு விற்பனையானது.

இதே போல் நண்டு விலையும் அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோஆட்டு இறைச்சி ரூ.750-க்கு விற்பனையானது. இறைச்சியில் தலை, ஈரல் என அதன் பாகங்களுக்கு ஏற்ப சில்லறை விலையில் ரூ.50 முதல் ரூ.200 வரை விற்பனையானது. கோழி இறைச்சி நேற்று விலை குறைந்து ஒரு கிலோ ரூ.210-க்கு விற்பனையானது.

விற்பனையில் தொய்வு

இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறியதாவது:-

திருவாரூருக்கு 4 டன் வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். பெரும்பாலும் நாகை மாவட்டத்தில் உள்ள மீன் பிடி பகுதிகளில் இருந்து தான் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. நாளை (இன்று) பொங்கல் பண்டிகை என்பதால் இன்றே (நேற்று) பெரும்பாலானோர் மீன்களை வாங்க வருகின்றனர்.

முதல் நாள் விலை அதிகமாக இருந்தாலும், அடுத்த நாள் இன்னும் விலை உயரும் என்ற அச்சத்தில் முன்னகூட்டியே மீன்களை வாங்கி செல்கின்றனர். மீன் விற்பனை பொறுத்தவரையில் தெருவுக்கு தெரு சிறிய, சிறிய மீன்கடைகள் வந்ததால் மொத்த விற்பனையில் சற்று தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.

இறைச்சி வியாபாாிகள்

ஆட்டு இறைச்சி விற்பனை குறித்து வியாபாரிகள் கூறுகையில், ஆட்டுஇறைச்சியை பொறுத்த வரையில் அதற்கு நிலையான விலை இது தான் என்று கூற முடியவில்லை. இறைச்சியின் தன்மை மற்றும் சூழ்நிலை பொறுத்து மாறுபடும். ஆட்டை வாங்கிய விலைக்கு இறைச்சியை விற்பனை செய்ய முடியவில்லை.

ளகோழி இறைச்சியானது விலை குறைந்தும் அதனை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் எப்போதும் வாங்கும் அளவுகளைவிட குறைந்த அளவிலேயே கோழிகளை வாங்கியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்