திண்டிவனம் அருகே வாகன சோதனை:20 துப்பாக்கிகள், 50 கத்திகளுடன் வந்த ஜீப்பை கண்டு போலீசார் அதிர்ச்சிரஜினிகாந்த்தின் படப்பிடிப்புக்காக எடுத்துச்செல்வதாக கூறியதால் விடுவிப்பு
திண்டிவனம் அருகே வாகன சோதனையின்போது 20 துப்பாக்கிகள், 50 கத்திகளுடன் வந்த ஜீப்பை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ரஜினிகாந்தின் படப்பிடிப்புக்காக எடுத்துச் செல்வது தெரியவந்ததால், ஜீப் விடுவிக்கப்பட்டது.
திண்டிவனம்
வாகன சோதனை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோஷணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த சமயத்தில் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி ஜீ மற்றும் காவல் என்ற வாசகத்துடன் வந்த ஜீப்பை போலீசார் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
போலீசார் அதிர்ச்சி
அப்போது ஜீப்பில் 20-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், 50-க்கும் மேற்பட்ட கத்திகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், இதுபற்றி திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் விரைந்து வந்து ஜீப்பில் வந்த 3 நபர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், அவர்கள் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் என்பதும், செஞ்சி பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் லால் சலாம் படப்பிடிப்புக்காக போலி துப்பாக்கிகள், போலி கத்திகளை சினிமாவில் பயன்படுத்தப்படும் ஜீப்பில் எடுத்து வந்தபோது சிக்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து, ஜீப்பில் எழுதப்பட்டிருந்த ஜீ மற்றும் காவல் என்ற வாசகங்களை மறைத்து சூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்லுமாறு ஜீப்பில் வந்தவர்களிடம் போலீசார் அறிவுறுத்தி, அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.