பாதிரியாரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2023-03-28 18:45 GMT

நாகர்கோவில்:

ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பாதிரியார்

கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). பாதிரியாரான இவர், இளம் பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் பேச்சிப்பாறையைச் சேர்ந்த ஒரு நர்சிங் மாணவி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீசில் புகார் அளித்தார்.

அதன்படி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து நீதிபதி உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து பாதுகாப்பு கருதி அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார்.

காவலில் எடுத்து விசாரணை

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவலில் எடுத்து விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த கோர்ட்டு பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை ஒரு நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.

அதன்படி பாளையங்கோட்டை சிறையில் இருந்த பாதிரியாரை போலீசார் நேற்று ஒரு நாள் மட்டும் காவலில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்த ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. வீடியோவில் இருக்கும் பெண்கள் தொடர்பாகவும் அவரிடம் கேட்கப்பட்டது. மேலும் ஆபாச உரையாடல் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

காதல்

அப்போது பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ ஏற்கனவே கூறிய தகவல்களை மட்டுமே போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆபாச புகைப்படத்தில் இருந்த பெண்ணும், அவரும் காதலித்து வந்ததாகவும், தான் பாதிரியார் என்பதால் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாததால் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததாகவும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து நர்சிங் மாணவியை தொந்தரவு செய்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கூறிய தகவல்களை போலீசார் சேகரித்து வைத்துக் கொண்டனர்.

பாதிரியாரை காவலில் வைத்து விசாரணைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருநாள் அவகாசம் முடிந்ததைத் தொடர்ந்து நேற்று மாலையில் அவர் மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பரப்பியவர்கள் யார்?

முன்னதாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தொடர்பான ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்