ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிசாந்த் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ஈரோடு-சேலம் ரெயில்வே தண்டவாளத்தில் ரோந்து சென்றனர். அப்போது ஈரோடு ரெயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் சந்தேகப்படும் படியாக அட்டை பெட்டி ஒன்று கிடந்தது. அந்த பெட்டியை போலீசார் திறந்து பார்த்தபோது, அதில் 4 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பாம்பினை மீட்டு ஈரோடு வனத்துறை அலுவலர் துரைசாமியிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த மண்ணுளி பாம்பு விற்பனைக்காக அட்டை பெட்டிக்குள் வைத்து கடத்தி செல்லும்போது மர்மநபர்கள் விட்டு சென்றனரா? என்ற கோணத்தில் ஈரோடு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்