வாலிபர் தவற விட்ட பணம், ஆவணங்களை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கொடுத்த போலீசார்

வாலிபர் தவற விட்ட பணம், ஆவணங்களை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கொடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

Update: 2023-05-15 20:52 GMT

கும்பகோணம்:

கும்பகோணத்தை அடுத்த மருதநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபா சாகர் (வயது 31). இவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கிருபா சாகர் கும்பகோணத்துக்கு வந்திருந்தார். பின்னர் அவர் தனது வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையை கடக்கும்போது அவர் கையில் வைத்திருந்த பை ஒன்று தவறி கீழே விழுந்துள்ளது. அந்த பையில் ரூ.10 ஆயிரம் மற்றும் ஓட்டுனர் உரிமம், வெளிநாட்டு கிரெடிட் கார்டு உள்ளிட்டவை இருந்துள்ளது. அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது தனது கைப்பை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் உத்தரவின் பேரில் கும்பகோணம் போலீஸ் கட்டுப்பாட்டு அறை போலீஸ் ஏட்டு சரவணன், கிருபா சாகர் கைப்பையை தவறவிட்ட பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது கிருபா சாகர் தவறவிட்ட பையை ஒரு நபர் எடுத்துச் செல்வது அந்த காட்சிகளில் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நபரிடம் இருந்து கைப்பை மற்றும் அதில் இருந்த ஆவணங்கள், பணம் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் அந்த கைப்பையை கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், கிருபா சாகரின் உறவினரை அலுவலகத்துக்கு நேரில் வரச்செய்து அவரிடம் ஒப்படைத்தார்.வாலிபர் ஒருவர் தவறவிட்ட ரொக்கம் மற்றும் ஆவணங்களை 24 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்