காரில் தப்பி வந்த கொள்ளையர்களை சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீசார்-திருவண்ணாமலையில் பரபரப்பு
பண்ருட்டியில் கொள்ளையடித்து விட்டு அங்கு திருடிய காரில் தப்பி தலைமறைவான கொள்ளையர்களை நேற்று சினிமா பாணியில் துரத்திச்சென்று திருவண்ணாமலையில் போலீசார் மடக்கி பிடித்தனர்.;
இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
19 பவுன் நகை கொள்ளை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள உறையூர் கிராமத்தில் கடந்த 23-ந் தேதி இரவு சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் (வயது 32), பாலாஜி (24) ஆகிய இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 19 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் அந்த வீட்டின் முன்பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் திருடிக்கொண்டு தப்பி விட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையிலான போலீசார் 24-ந் தேதி கொள்ளை நடந்த வீட்டினை நேரில் பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் கொள்ளையர்கள் இருவரும் திருடிய காருடன் சென்னையில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
தலைவாசலில் பதுங்கல்
நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ெகாள்ளையர்கள் இருவரும் பதுங்கி இருப்பதாக பண்ருட்டி போலீசாருக்கு தெரிய வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அவர்களை பிடிக்க சென்று உள்ளனர். போலீசார் வருவதை அறிந்த அவர்கள் காரில் தப்பிச்சென்றனர்.
போலீசார் அவர்களை பிடிக்க பின் தொடர்ந்தனர். அவர்கள் வருவதை அறிந்த கொள்ளையர்கள் காரை வேகமாக ஓட்டி தப்பிச்சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை பின்தொடர்ந்து தங்கள் வாகனத்தில் சினிமா பாணியில் துரத்திச்சென்றனர்.
கொள்ளையர்கள் காரில் அதிவேகமாக வந்தபோது வழியில் 2 டோல்கேட்டுகளை உடைத்துக் கொண்டு தப்பித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் நுழைந்தனர்.
சினிமா பாணியில் துரத்தினர்
தச்சம்பட்டு வழியாக கொள்ளையர்களின் கார் திருவண்ணாமலையை நோக்கி வந்தது. இது குறித்து கடலூர் போலீசார் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து அவரது மேற்பார்வையில் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன், முருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் காரில் தப்பி வரும் கொள்ளையர்களை பிடிக்க வாகனங்களில் தீவிரமாக தயாராக இருந்தனர்.
மேலும் திருவண்ணாமலை புறவழிச்சாலையில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர். அப்போது புறவழிச்சாலை வழியாக குற்றவாளிகள் வந்த கார் மின்னல் வேகத்தில் வந்தது. அவர்களை போலீசார் துரத்தி வந்தனர்.
திருவண்ணாமலையில் காரை மடக்கினர்
திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள சண்முகா அரசு பள்ளி அருகில் உள்ள கிரிவலப்பாதை சந்திப்பு பகுதியில் சினிமா பாணியில் திருவண்ணாமலை போலீசார் தடுப்புகள் அமைத்து லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்களை வழியில் குறுக்கே நிறுத்தியிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கொள்ளையர்கள் வந்த காரை போலீசார் மடக்கினர். இதனால் கொள்ளையர்களால் அங்கிருந்து தப்ப முடியவில்லை. எனினும் காருக்குள்ளேயே குற்றவாளிகள் இருந்து கொண்டனர்.
அதிரடியாக செயல்பட்ட போலீசார் துணிச்சலுடன் செயல்பட்டு கார் கண்ணாடியை உடைத்து காருக்குள் பாய்ந்து உள்ளே இருந்த 2 பேைரயும் அமுக்கிப்பிடித்தனர்.
பின்னர் 2 பேரையும் காருக்குள் இருந்து வெளியே இழுத்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணையில் இருவரும் பண்ருட்டியில் திருடிய யுவராஜ் மற்றும் பாலாஜி என்பது உறுதியானது.
அவர்களிடம் இருந்து பண்ருட்டியில் கொள்ளையடித்த 19 பவுன் நகை மற்றும் காரையும் பறிமுதல் செய்து 2 ேபரையும் கைது செய்தனர்.
பண்ருட்டி போலீசாரிடம் ஒப்படைப்பு
இதனை தொடர்ந்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையிலான தனிப்படை போலீசார் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.
அவர்களிடம் பிடிபட்ட யுவராஜ், பாலாஜி இருவரையும் ஒப்படைத்து அவர்கள் திருடிய நகை மற்றும் காரையும் திருவண்ணாமலை போலீசார் ஒப்படைத்தனர்.
போலீசாருக்கு வெகுமதி
காரில் தப்பி வந்த 2 கொள்ளையர்களை திருவண்ணாமலையில் மடக்கி பிடிக்க உறுதுணையாக செயல்பட்ட போலீசாரை திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்ததுடன் அனைவருக்கும் வெகுமதி வழங்கி கவுரவித்தார். நெரிசல் மிகுந்த கிரிவலப் பாதை சந்திப்பு பகுதியில் சினிமா பாணியில் திருவண்ணாமலை போலீசார் தடுப்புகள் அமைத்து துணிச்சலுடன் செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.