பெண்ணின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்ட நபர் கைது
பெண்ணின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டது நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த சூர்யபிரகாஷ் என்பது தெரியவந்தது.
சேலம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவர் தையல் கடை வைத்துள்ளார். இவர் கடந்த ஜனவரி மாதம் தனது கடை முன்பு துடைப்பத்தால் பெருக்கி கொண்டிருந்தார். இதுதொடர்பான ஆபாச புகைப்படம் ஒன்று இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்டு வைரலாக பரவியது.
இதை உறவினர்கள் சிலர் பார்த்து அந்த பெண்ணுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அந்த பெண் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாகவும், எனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில், அந்த பெண்ணின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டது நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சூர்யபிரகாஷ் (வயது 41) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தனது செல்போனில் அந்த பெண்ணை படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்டது தெரியவந்தது.
இதையடுத்து சூர்யபிரகாசை நேற்று போலீசார் கைது செய்தனர். இதனிடையே அந்த இணையதளத்தில் இருந்து அந்த பெண்ணின் சர்ச்சைக்குரிய புகைப்படம் அகற்றப்பட்டது.