இறைச்சி கழிவுகளை லாரியில் ஏற்றி வந்து கொட்டியவர் கைது
கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை லாரியில் ஏற்றி வந்து கொட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
ராதாபுரம்:
கேரளாவில் இருந்து மாடு, கோழி இறைச்சி கழிவுகளை லாரிகளில் ஏற்றி வந்து ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சி பகுதியில் சிலர் கொட்டி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ராதாபுரம் அருகே பட்டார்குளத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் உதயகுமார் (வயது 39) கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மாட்டு எலும்பு நிறுவனத்தில் வேலை பார்த்ததும், இவர் இளைய நயினார்குளம் வடக்கூரைச் சேர்ந்த முத்துவின் (60) மூலமாக மாடு, கோழி இறைச்சி கழிவுகளை ஆத்துகுறிச்சி பகுதியில் கொட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து முத்துவை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான உதயகுமார், அவரது உறவினரான தங்கராஜ் மகன் அருள் (37) ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.