என்ஜினீயரிடம் ரூ.13 ஆயிரத்து 500 மோசடி செய்தவர் கைது
வௌிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி திருவாரூர் என்ஜினீயரிடம் ரூ.13 ஆயிரத்து 500 மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
என்ஜினீயர்
திருவாரூரை அடுத்த புலிவலம் பகுதியை சேர்ந்தவர் உத்திராபதி. இவரது மகன் மணிகண்டன்(வயது 26). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் வேலை கிடைக்காததால் தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
வௌிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்த இவர் இதற்காக சமூக வலைதளங்களில் செல்போன் எண்ணை பதிவிட்டு வேலை தேடினார்.
வெளிநாட்டு வேலைக்கு...
இவருடைய வாட்ஸ்-அப்பிற்கு மர்ம நபர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அந்த குறுஞ்செய்தியில், தான் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வருவதாக கூறி அறிமுகம் ஆகியுள்ளார்.
அந்த நபரிடம் மணிகண்டன் வெளிநாட்டிற்கு தன்னை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அதன்படி அந்த நபர் மணிகண்டனை வேலைக்கு அனுப்ப உறுதி அளித்துள்ளார்.
ரூ.13 ஆயிரத்து 500 மோசடி
மேலும் டிக்கெட், விசா உள்ளிட்டவற்றிற்கு முன்பணமாக கட்டணம் ரூ.13 ஆயிரத்து 500 கேட்டுள்ளார். இதை நம்பிய மணிகண்டன் பல்வேறு தவணைகளாக ரூ.13 ஆயிரத்து 500 ஆன்லைன் மூலம் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
பணத்தை அனுப்பி வைத்த பிறகு அந்த நபரை மணிகண்டன் தொடர்பு ெகாள்ள முயன்றுள்ளார் ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதுகுறித்து திருவாரூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
கைது
விசாரணையில் மணிகண்டனிடம் பணம் மோசடி செய்தது புதுக்கோட்டை மாவட்டம் ஏமாத்தூர் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் கார்த்திக்(33) என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து புதுக்கோட்டை சென்ற திருவாரூர் சைபர் கிரைம் போலீசார் கார்த்திகை கைது செய்தனர்.