பா.ம.க.வுக்கு விக்கிரவாண்டி மக்கள் சரியான பாடத்தை புகட்டியிருக்கிறார்கள் - செல்வப்பெருந்தகை

தேசிய அளவிலும் இந்தியா கூட்டணிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை இடைத்தேர்தல் முடிவுகள் உறுதி செய்துள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-13 13:20 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 67, 169 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. ஆதரவு பெற்ற பா.ம.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்திருக்கிறார்கள். சமூகநீதி கொள்கையை அடகு வைத்து பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ம.க. படுதோல்வி அடைந்திருக்கிறது.

விக்கிரவாண்டி மக்கள் பா.ம.க.வுக்கு சரியான பாடத்தை புகட்டியிருக்கிறார்கள். இதன்மூலம் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி நல்லாட்சி நடத்தி வருகிற மு.க. ஸ்டாலின் தலைமை மீது நம்பிக்கை வைத்து அமோக வெற்றியை விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி மக்கள் வழங்கியிருக்கிறார்கள். சமீபகாலமாக எதிர்கட்சிகள் பரப்பி வந்த ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி இடைத்தேர்தல் வெற்றியை வழங்கியிருக்கிறார்கள்.

கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள், ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்று வருகிற தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கிற வகையில் விக்கிரவாண்டி தேர்தல் தீர்ப்பு அமைந்துள்ளது.

அதேபோல, பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 இடைத் தேர்தல்களில் 11 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி தோற்கடிக்கப்பட்டு இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டியதைப் போல இடைத் தேர்தலிலும் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டதை இடைத்தேர்தல் தோல்விகள் உறுதி செய்கின்றன. ராகுல்காந்தி மேற்கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு மக்கள் ஆதரவு அளித்து இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். இனி வருகிற காலங்களில் தமிழகத்திலும், தேசிய அளவிலும் இந்தியா கூட்டணிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை இடைத்தேர்தல் முடிவுகள் உறுதி செய்துள்ளன.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்காக வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்