குமரி மீனவர்களின் வலையை அறுத்துச்சென்ற பனாமா நாட்டு கப்பல்

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது குமரி மீனவர்களின் வலையை அறுத்துச் சென்ற பனாமா நாட்டு கப்பல் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-04 18:45 GMT

கொல்லங்கோடு:

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது குமரி மீனவர்களின் வலையை அறுத்துச் சென்ற பனாமா நாட்டு கப்பல் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்தூர் மீனவர்கள்

கொல்லங்கோடு அருகே உள்ள தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜாண் பிரிட்டோ (வயது44). இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் தூத்தூர் பகுதியை சேர்ந்த பிஸ்ட்ரோ(38), பூத்துறையை சேர்ந்த பிராங்க்ளின்(64) ஆகிய 3 பேரும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் கரையில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலுக்குள் சென்று அங்கு வலையை வீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

பனாமா நாட்டு கப்பல்

அப்போது, அந்த வழியாக வந்த பனாமா நாட்டு கப்பல் ஒன்று மீனவர்கள் கடலில் வீசி இருந்த வலைகளை அறுத்து தள்ளிவிட்டு அதிவேகமாக கடந்து சென்றது. மேலும், கப்பல் வந்த வேகத்தில் கடலில் அலைகள் அதிவேகமாக எழுந்ததால் மீனவர்கள் சென்ற படகு தடுமாறியது.

ஆனால், படகு கவிழாததால் அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த 3 மீனவர்களும் உயிர் தப்பினர். இந்த விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான வலைகள் சேதமடைந்து தங்களுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

அரசுக்கு கோரிக்கை

இதேபோன்று பலமுறை வெளிநாட்டு கப்பல்கள் அத்துமீறி உள்நாட்டு மீனவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்துவதும், மீனவர்களின் உடமைகளை சேதப்படுத்துவதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

எனவே, விபத்தை ஏற்படுத்திய வெளிநாட்டு கப்பல் மீது முறையான நடவடிக்கை எடுப்பதுடன், கப்பல்களை இயக்க வரைமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய நிர்வாக குழு உறுப்பினர் ஜோஸ்பில்பின் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்