லாரி மீது ஆம்னி பஸ் மோதி தீப்பிடித்து எரிந்தது

திருவேற்காடு அருகே லாரி மீது கர்நாடக மாநில ஆம்னி பஸ் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள், வாகன ஓட்டிகள் அதிக்குள்ளானார்கள்.

Update: 2023-07-30 06:08 GMT

திருவேற்காடு, 

கர்நாடக மாநிலத்தில் இருந்து அரசு ஆம்னி பஸ் ஒன்று சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு நோக்கி புறப்பட்டு வந்தது. நேற்று காலை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி சிக்னல் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது மதுரவாயலில் இருந்து திருவேற்காடு நோக்கி ெசங்கல் ஏற்றி கொண்டு வந்த பெரிய அளவிலான லாரி, சாலையின் குறுக்கே திரும்பி திருவேற்காடு நோக்கி செல்ல முயன்றது. அப்போது வேகமாக வந்த கர்நாடக மாநில ஆம்னி பஸ், எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

இதனால் பஸ்சில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து எழுந்தனர். பஸ் டிரைவர் கீழே இறங்கி பார்த்தார். அப்போது பஸ்சின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. திடீரென பஸ்சின் முன்பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

அதிர்ச்சி அடைந்த டிரைவர் கூச்சலிட்டார். இதனால் பஸ்சில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்துகொண்டு தங்கள் உடைமைகளுடன் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் பஸ்சின் முன் பகுதி கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் பஸ் முழுவதும் தீ பரவியது.

தீயானது அருகில் நின்ற லாரிக்கும் பரவியது. நடுரோட்டில் ஆம்னி பஸ்சும், லாரியும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. பல அடி உயரத்துக்கு கரும்புகை மூட்டம் எழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மதுரவாயல், கோயம்பேடு, பூந்தமல்லி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பஸ் மற்றும் லாரியில் எரிந்த தீயை நீண்டநேரம் போராடி அணைத்தனர். எனினும் தீ விபத்தில் கர்நாடக மாநில ஆம்னி பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. லாரியின் பின்பகுதி இருந்த டயர்கள் அனைத்தும் தீக்கிரையாகின.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார், சாலையின் நடுவில் தீ விபத்தில் சிக்கி எரிந்து கிடந்த 2 வாகனங்களையும் கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.

இந்த விபத்து காரணமாக காலை நேரத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் வேலைக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.

வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாலும், அவற்றை அப்புறப்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டதாலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் மதுரவாயலில் இருந்து திருவேற்காடு செல்வதற்காக சாலையின் குறுக்கே திரும்பிய லாரியை கவனிக்காமலும், சிக்னலை மதிக்காமலும் கர்நாடக மாநில அரசு ஆம்னி பஸ் வேகமாக வந்து லாரியின் டீசல் டேங்க் மீது மோதியதில் 2 வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் ெதாடர்ந்து விசாரித்து வருகின்றனர். பஸ்சில் தீப்பிடித்து எரிந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கிவிட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்