2 நாள் சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடித்து வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அடுத்த `செக்'
கடந்த 2 நாட்களாக எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.;
கரூர்,
நிலமோசடி வழக்கில் அ.தி. மு.க.வைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 16-ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை, காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் கரூர் கோர்ட்டில் மனு அளித்தனர். அப்போது 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து கடந்த 2 நாட்களாக கரூர் காந்திகிராமத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 2 நாள் விசாரணை முடிந்து நேற்று மதியம் கரூர் கோர்ட்டில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர்.
இதற்கிடையே கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக வாங்கல் போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்திருந்தனர். இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு வாங்கல் போலீசார் கரூர் கோர்ட்டில் மனு அளித்திருந்தனர்.
இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணைக்காக எம்.ஆர்.விஜயபாஸ்கரை வாங்கல் போலீசார் அழைத்து சென்றனர்.