புதிய கல்வி கொள்கையை முழுமையாக ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்; தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. எனவே, அதை முழுமையாக ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடியில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2023-03-29 18:45 GMT

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. எனவே, அதை முழுமையாக ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடியில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தெலுங்கானா கவர்னர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற கல்லூரி விழாவில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுனருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

விமான நிலையத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னேற்றம்

தூத்துக்குடிக்கு பல திட்டங்கள் வரவேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தி உள்ளோம். இந்த நிலையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் ரூ.200 கோடியில் 6 வழிச்சாலை திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி சமீபத்தில் அறிவித்து உள்ளார்.

இது தூத்துக்குடிக்கு பொருளாதாரத்தில் பிரமாண்டமான வளர்ச்சியை கொண்டு வரும். இதுபோல பல முன்னேற்றங்கள் வர இருக்கின்றன.

கப்பல் போக்குவரத்து

நாட்டில் அடிப்படை கட்டமைப்பை உருவாக்க வேண்டும், வருங்கால சந்ததியினர் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என பாரத பிரதமர் சொன்னதால் ஒவ்வொரு இடங்களிலும் கதி சக்தி என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நெடுஞ்சாலை, துறைமுகம் உள்ளிட்ட 6 துறைகள் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கான இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.

இதனால் தான் புதுச்சேரியும் பல முன்னேற்றத்தை பெற்று வருகிறது. தற்போது காரைக்கால் முதல் இலங்கை வரை கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட இருக்கிறது.

அதேபோல் புதுச்சேரியில் இருந்து கோவை மற்றும் சென்னைக்கு 20 பேர் பயணம் செய்யக்கூடிய சிறிய ரக விமான போக்குவரத்து தொடங்கப்பட இருக்கிறது.

முன்னுதாரணம்

எனவே, எல்லா வகையிலும் வளர்ச்சி திட்டங்களை பாரத பிரதமர் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அதில் தூத்துக்குடிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது. தூத்துக்குடி துறைமுகமும் வளர்ச்சி பணியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

புதுச்சேரியில் குடும்ப பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை அறிவித்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். புதுச்சேரியில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் கொடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் கொடுக்கப்படும் என அறிவித்து உள்ளது. இது குடும்ப பெண்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த விஷயத்தில் மற்ற மாநிலங்களுக்கு புதுச்சேரி முன்னுதாரணமாக உள்ளது.

புதிய கல்விக்கொள்கை

அதேபோன்று புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள வாகனங்கள் கூட புதுச்சேரிக்கு வந்து பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றன.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. ஆனால், அதனை தமிழகம் போன்ற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். எனவே, அதில் உள்ள நல்லவற்றை முழுமையாக ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்