நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு

ஆரம்ப சுகாதார நிலையத்தை மாற்றி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.;

Update:2023-09-01 00:15 IST

நெல்லிக்குப்பம், 

நகரமன்ற கூட்டம்

நெல்லிக்குப்பத்தில் நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் கிரிஜா திருமாறன், கமிஷனர் கிருஷ்ணராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 2-ம் கட்ட காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ததற்கும், நகர மன்ற தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் வழங்கியதற்கும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது, நெல்லிக்குப்பம் நகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதியான கழிவறை, புதிய வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்புகள் ஆகியவற்றை பொது நிதியிலிருந்து ஏற்படுத்தி தர சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சுகாதார நிலையத்தை மாற்றி...

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

இக்பால் (ம.ம.க):- நெல்லிக்குப்பத்தில் ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகின்றது. ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் சரியான முறையில் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இப்போது ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் மேல்பாதி பகுதியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்தால், நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் கடுமையாக பாதிப்படைவார்கள். எனவே ஏற்கனவே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும்.

இதற்கு பதிலளித்து பூபாலன் (சுயேச்சை) பேசுகையில், உங்கள் வார்டுக்கு தேவையான பணிகள், திட்டங்கள் குறித்து கேட்க வேண்டும். எங்கள் வார்டில் வரக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் என்றார்.

வாக்குவாதம்

அப்போது இக்பால், மன்ற பொருள் குறித்து எனது கருத்தை தெரிவிக்கிறேன். உங்களது கருத்தை நீங்கள் தெரிவியுங்கள் என்றார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கவுன்சிலர்கள் முத்தமிழன், ஜெயபிரபா மணிவண்ணன், சத்யா, புனிதவதி ஆகியோர் கவுன்சிலர் இக்பால் அவரது கருத்தை தெரிவிக்கிறார் என்றனர். அப்போது நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், அந்தந்த கவுன்சிலர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கின்றனர். ஆகையால் கவுன்சிலர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படக்கூடாது என எச்சரித்தார். ஆனால் தொடா்ந்து கவுன்சிலர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால், இக்பால் நெல்லிக்குப்பத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் புதிய இடத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தார்.

முத்தமிழன் (தி.மு.க.):- நகரமன்ற கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்றார்.

இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்