கச்சா எண்ணெய் குழாய்கள் அகற்றும் பணியை தேசிய பசுமை தீர்ப்பாய குழுவினர் ஆய்வு

நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் சி.பி.சி.எல். நிறுவனத்தால் போடப்பட்ட கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்களை அகற்றும் பணியை தேசிய பசுமை தீர்ப்பாய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

Update: 2023-04-18 18:45 GMT

நாகூர்:

நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் சி.பி.சி.எல். நிறுவனத்தால் போடப்பட்ட கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்களை அகற்றும் பணியை தேசிய பசுமை தீர்ப்பாய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

கச்சா எண்ணெய் கசிவு


நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் (சி.பி.சி.எல்.) சார்பில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட கச்சா எண்ணெய் எடுத்து செல்லும் குழாயில் கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது. இதனால் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் மட்டும் இன்றி சாமந்தான்பேட்டை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், வேளாங்கண்ணி, செருதூர் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மாசு ஏற்பட்டது. இதனால் கடற்கரையை ஒட்டி பூமிக்கு அடியில் போடப்பட்ட குழாயை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என நாகப்பட்டினம் தாலுகா மீனவர்கள் வலியுறுத்தினர். நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

குழாய்களை அகற்ற நடவடிக்கை

இதையடுத்த அமைச்சர் மெய்யநாதன் சம்பவ இடத்திற்கு வந்து குழாய் உடைப்புகளை ஆய்வு செய்தார். மேலும் சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதையடுத்து சி.பி.சி.எல். நிறுவனம், மீனவ கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பூமிக்கு அடியில் போடப்பட்ட குழாய் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதையடுத்து கடந்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மூலம் சி.பி.சி.எல். நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் குழாயை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.எல். நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உறுதி அளித்தனர்.

ஆய்வு

இதன்படி பூமிக்கு அடியில் போடப்பட்ட குழாய்களை அகற்றும் பணியை சி.பி.சி.எல். நிறுவனம் தொடங்கியது. அதை தொடர்ந்து இந்த குழாய்கள் அகற்றும் பணியை ஆய்வு செய்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம், மீன்வளத்துறை, சுற்றுச்சூழல் ஆகியயை 5 பேர் கொண்ட குழுவை நியமித்தது. இந்த குழுவினர் நேற்று நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் குழாய்கள் அகற்றும் பணியை அந்த குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட 850 மீட்டர் நீளமுள்ள குழாய்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு விட்டது என தெரிவித்தனர். இதில் சப்- கலெக்டர் பனோதம்ரு கேத்லால், தாசில்தார் ராஜசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி மற்றும் பட்டினச்சேரி மீனவ பஞ்சாயத்தார்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்