மதுரையில் பூட்டி கிடந்த வீட்டில் வெடித்து சிதறிய மர்ம பொருள்- நாட்டு வெடிகுண்டுகளா? என போலீசார் விசாரணை

மதுரையில் பூட்டி கிடந்த வீட்டில் வெடித்து சிதறிய மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-07-02 20:38 GMT


மதுரையில் பூட்டி கிடந்த வீட்டில் வெடித்து சிதறிய மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வெடித்து சிதறியது

மதுரை கரிமேடு விஸ்வசாபுரி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 28). தனியார் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவில் அஜித்குமாரின் வீட்டிற்குள் இருந்து திடீரென பயங்கர சத்தத்துடன் பொருள் வெடித்து சிதறி உள்ளது. இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது வெடிச்சத்தத்துடன், வீட்டிற்குள் இருந்து புகை வெளிவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இதுபற்றி தீயணைப்பு நிலையத்திற்கும், கரிமேடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

வீட்டில் யாரும் இல்லை

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் யாரும் இல்லை. மேலும், அப்பகுதியில் விசாரித்தபோது கடந்த 2 நாட்களுக்கு முன்பு அஜித்குமார் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் வெளியூர் சென்றிருப்பது தெரியவந்தது.

வீட்டின் அறையில் பார்த்தபோது அங்கு மர்மபொருள் ஒன்று வெடித்து சிதறியதும், அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது சிதறி கிடந்ததும் தெரியவந்தது.

நாட்டு வெடிகுண்டா?

இதனையடுத்து போலீசார் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு கொள்ள முடியவில்லை.

வீட்டிற்குள் வெடித்தது நாட்டு வெடிகுண்டா? அல்லது வேறு ஏதேனும் வெடிக்கும் மர்ம பொருளா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்து, தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவத்தால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்