மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாததால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போகிறேன்- மதுரை மாநகராட்சி கூட்டத்தில் ம.தி.மு.க. எம்.எல்.ஏ. பேச்சால் பரபரப்பு

மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாததால் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போகிறேன் என்று மாநகராட்சி கூட்டத்தில் ம.தி.மு.க. எம்.எல்.ஏ. பூமிநாதன் பேசினார்.

Update: 2023-06-26 20:55 GMT


மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாததால் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போகிறேன் என்று மாநகராட்சி கூட்டத்தில் ம.தி.மு.க. எம்.எல்.ஏ. பூமிநாதன் பேசினார்.

மாமன்ற கூட்டம்

மதுரை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம், அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது. கமிஷனர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி தலைமை தாங்கினார்.

கூட்டம் தொடங்கியவுடன் முதலில் மண்டல தலைவர்கள் பேசினர். அதன்பின் சபைக்கு வந்திருந்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதனை பேசுமாறு மேயர் இந்திராணி கேட்டுக்கொண்டார். பூமிநாதன் எம்.எல்.ஏ. பேசியபோது, நான் எம்.எல்.ஏ. ஆகி 2 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் மக்களின் சில அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. குடிநீரில் கழிவு நீர் கலப்பது, பாதாள சாக்கடை அடைப்பு என தொடர்ந்து பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது. நானும் தொடர்ச்சியாக மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து சீர் செய்து வருகிறேன். ஆனாலும் எந்த பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு காண முடியவில்லை. மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால் எம்.எல்.ஏ.வாக இருந்து என்ன பயன்?. எனவே எனது கட்சித்தலைவர் வைகோவிடம் சொல்லி விட்டு முதல்-அமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ராஜினாமா செய்ய போகிறேன் என்றார்.

அதன்பின் பேசிய மேயர் இந்திராணி, எம்.எல்.ஏ. மன வருத்ததுத்துடன் பேசுவது வருத்தமாக இருக்கிறது. உங்கள் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். எம்.எல்.ஏ. சொல்லும் மக்கள் பிரச்சினைக்கு அதிகாரிகள் முன்னுரிமை கொடுத்து செயலாற்ற வேண்டும் என்றார்.

சபையில் விவாதம்

முன்னதாக கூட்டத்தில் பேசிய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த துணை மேயர் நாகராஜன், கடந்த 2 ஆண்டுகளாக எந்த பணியும் நடைபெற வில்லை. நாங்கள் மாநகராட்சி கமிஷனர் உள்பட அதிகாரிகளிடம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடிதம் கொடுக்கிறோம். ஆனால் அதற்கு எந்த பதிலும் சரியாக தருவதில்லை. எனது வார்டில் எந்த பணியும் நடைபெறவில்லை என்றார். உடனே மேயர், துணை மேயர் வார்டில் நிறைவேற்றபட்ட பணிகளை கூறுமாறு அதிகாரிகளை கேட்டு கொண்டார்.

அதனைத்தொடர்ந்து மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் (அ.தி.மு.க.) சோலைராஜா பேசினார். அப்போது அவர், கடந்த 2 ஆண்டுகளாக எந்த பணியும் மாநகராட்சியில் நடைபெறவில்லை என்று ஒவ்வொரு கூட்டத்திலும் நாங்கள் இதனை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இப்போது உங்கள் கூட்டணி கட்சியை சேர்ந்த பூமிநாதன் எம்.எல்.ஏ., கம்யூனிஸ்டு கட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோரே மாநகராட்சியின் நிலையை பற்றி கூறி விட்டனர். எம்.எல்.ஏ.வே. ராஜினாமா செய்ய போகிறேன் என்று கூறி விட்டார். அவர்களது பேச்சே, மாநகராட்சி செயல்பாட்டுக்கு சாட்சி என்று கூறினார்.

அதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் மேயர் அனைவரையும் அமருவதற்கு உத்தரவிட்டார். தொடர்ந்து சபையில் விவாதம் நடந்தது.

மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாததால் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போகிறேன் என்று மாநகராட்சி கூட்டத்தில் ம.தி.மு.க. எம்.எல்.ஏ. பூமிநாதன் பேசியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைப்பதா?

-பூமிநாதன் எம்.எல்.ஏ.- துணை மேயருக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கண்டனம்

ராஜினாமா செய்ய போவதாக கூறிய பூமிநாதன் எம்.எல்.ஏ., பணி ஒன்றுமே நடக்க வில்லை என்று கூறிய கம்யூனிஸ்டு துணை மேயர் நாகராஜன் ஆகியோருக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மாநகராட்சி இருண்டு போய் இருந்தது. முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு தான் மாநகராட்சி இருளில் இருந்து மீண்டு வருகிறது. அது எல்லாம் பூமிநாதன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றாக தெரியும். ஆனால் அவர் வேண்டுமென்றே அவதூறு பேசுகிறார். அவர் ம.தி.மு.க. என்றாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தான் வெற்றி பெற்றார். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் அனைத்திற்கு ஒரே நேரத்தில் தீர்வு கண்டுவிட முடியாது. படிப்படியாக தான் பிரச்சினையை தீர்க்க முடியும்.

முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் மேயர் இந்திராணி தொடர்ந்து ஒவ்வொரு பிரச்சினைகளை தீர்த்து வருகிறார். பூமிநாதன் எந்த பிரச்சினையாக இருந்தாலும், மேயர் கவனத்திற்கு கொண்டு செல்லும் போது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே போல் கம்யூனிஸ்டு துணை மேயர் நாகராஜன், தி.மு.க. தயவால் தான் துணை மேயர் ஆகி இருக்கிறார்.

மதுரை மாமன்றத்தில் தி.மு.க.விற்கு 3ல்-2 பங்கு மெஜாரிட்டி உள்ளது. இருப்பினும் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கட்சிக்கு துணை மேயர் வழங்கப்பட்டது. ஆனால் துணை மேயர் நாகராஜன், விதிகளை மீறி சபையில் பேசி வருகிறார். அவருக்கு உண்மையில் பேச வேண்டுமென்றால் துணை மேயர் பதவியில் இருந்து விலகி விட்டு வந்து பேசட்டும். அவருக்கு நாங்கள் உரிய முறையில் பதில் தருவோம். உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வது சரியல்ல.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்