மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை பழனியப்பா முக்கம் அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கடைக்கு அருகில் பள்ளிக்கூடம், அரசு மகப்பேறு மருத்துவமனை, கோவில் உள்ளிட்டவைகள் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பெண்கள் அமைப்புகள் சார்பில், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி இந்த கடை மூடப்பட்டது. ஆனால் கடையில் உள்ள மதுபானங்கள் மட்டுமல்லாது டாஸ்மாக் பெயர் பலகையும் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில் இந்த கடை தற்போது மீண்டும் திறப்பதற்கு முயற்சி எடுப்பதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் மூடப்பட்ட டாஸ்மாக் கடைக்கு முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக டாஸ்மாக் நிர்வாகம் மூடப்பட்ட கடைக்கு முன்பு உள்ள பெயர் பலகையை அகற்ற வேண்டும். கடையில் உள்ள மதுபானங்களை அப்புறப்படுத்தி இந்த கடையை நிரந்தரமாக மூடி சீல் வைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதையறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் கடை முன்பாக இருந்த டாஸ்மாக் பெயர் பலகை அகற்றப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.