தண்டவாளத்தில் நிறுத்தப்பட்ட சைக்கிள் மீது மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதால் பரபரப்பு

விருத்தாசலம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்ட சைக்கிள் மீது மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது.

Update: 2023-07-20 18:45 GMT

விருத்தாசலம், 

மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில்

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளுடன் மங்களூர் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2.15 மணியளவில் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை இடையே கில்லனூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியாக சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த சமயத்தில் ரெயில் வேகமாக வருவதை பார்த்த மர்மநபர் தான் ஓட்டி வந்த சைக்கிளை தண்டவாளத்தில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டார். அடுத்த சில நொடிகளில் அதிவேகமாக வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த சைக்கிள் மீது மோதியது.

இதில் ரெயில் என்ஜின் முன்பகுதியில் அந்த சைக்கிள் சிக்கிக்கொண்டதோடு, அதில் இருந்த உதிரிபாகங்கள் ஆங்காங்கே விழுந்தன.

நடுவழியில் நிறுத்தம்

இதை கவனித்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நடுவழியில் நிறுத்தியதுடன், இதுபற்றி விருத்தாசலம் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரெயில் என்ஜினில் சிக்கிய சைக்கிளை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் சைக்கிளை எடுக்க முடியவில்லை.

இதையடுத்து இரவு 2.45 மணியளவில் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு விருத்தாசலம் அடுத்த பூவனூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு என்ஜினில் சிக்கிய சைக்கிளை ஊழியர்கள் அகற்றினர். அதைத் தொடர்ந்து மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து, மங்களூர் நோக்கி புறப்பட்டு சென்றது.

மேலும் இதுகுறித்து விருத்தாசலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்