மனைவியை கத்தியால் குத்தியவர் கைது
விராலிமலையில் மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
குடும்பத்தகராறு
இலுப்பூர் தாலுகா கட்டக்குடியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 35), தொழிலாளி. இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் பிரியா விராலிமலை அருகே வில்லாரோடையில் உள்ள தனது தந்தை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக பால்ராஜ் குழந்தைகளை காரணம் காட்டி செல்போனில் பிரியாவை தொடர்பு கொண்டு பேசி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று விராலிமலை முருகன் கோவிலுக்கு சென்று வரலாம் என பால்ராஜ் தனது மனைவியை அழைத்துள்ளார்.
கத்திக்குத்து
அதன்பேரில் பிரியாவும் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் கணவன்-மனைவி 2 பேரும் யானை பாதை வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தபோது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பால்ராஜ் தனது பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய வகை கத்தியால் பிரியாவின் கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனைகண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் இதுகுறித்து விராலிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தம் சொட்ட சொட்ட வலியால் துடித்த பிரியாவை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பால்ராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.