கோவிலுக்கு வந்தசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
கோவிலுக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
வளவனூர்,
சிறுமிக்கு பாலியல் தொல்லை
விழுப்புரம் அருகே உள்ள கோவிலுக்கு சம்பவத்தன்று பெண் ஒருவர், தனது 9 வயது மகளுடன் சாமி கும்பிட வந்திருந்தார். அந்த சிறுமியின் தாய், சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் சிறுமி மட்டும் கோவில் வளாகத்தில் நின்றுகொண்டிருந்தாள். அப்போது அங்கு மஞ்சள் நிற வேட்டியும், நெற்றி நிறைய திருநீறும் பூசிக்கொண்டு சாமியார் போன்று இருந்த நபர் ஒருவர், அந்த சிறுமியிடம் சென்று பிரசாதம் தருகிறார்கள், நான் வாங்கித்தருகிறேன் என்றுகூறி தனியாக அழைத்துச்சென்று சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
கைது
இதைப்பார்த்ததும் அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள், அந்த நபரை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்து வளவனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், விழுப்புரம் கே.கே.சாலை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (40) என்பது தெரியவந்தது.
இதையடுத்து ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.