முதியவரை அரிவாளால் வெட்டியவர் கைது
முதியவரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள பட்டணங்குறிச்சி ஏரி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அமிர்தராஜ் மகன் ஆஷா(வயது 34). இவரது சித்தப்பா மகனான டேவிட் என்பவருக்கு அதே தெருவை சேர்ந்த அந்தோணிசாமி(62) என்பவர் ரூ.10 ஆயிரம் கடனாக கொடுத்ததாகவும், அதனை திருப்பித்தராமல் டேவிட் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தோணிசாமி, ஆஷாவிடம் தன்னிடம் டேவிட் பணம் வாங்கியதாகவும், அதனை கொடுக்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதை கேட்ட ஆஷா, டேவிட்டிடம் அந்தோணிசாமிக்கு பணம் தரும்படி கூறியதாக கூறப்படுகிறது. ஆஷா கூறியது போல் டேவிட், அந்தோணிசாமிக்கு பணம் கொடுத்து விட்டார். இந்நிலையில் பணம் கொடுத்த விஷயத்தை அந்தோணிசாமி ஆஷாவிடம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆஷா, அந்தோணிசாமியிடம் தகராறு செய்ததாகவும், வாய் தகராறு முற்றி ஒரு கட்டத்தில் அந்தோணிசாமியை ஆஷா கையில் வைத்திருந்த கத்தியால் வெட்டியதாகவும் தெரிகிறது. இதில் காயமடைந்த அந்தோணிசாமி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் அவர் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆஷாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரித்து வருகின்றனர்.