ரிப்பன் மாளிகையில் எழில்மிகு ஆகாய நடை மேம்பாலம்

ரிப்பன் மாளிகையில் அனைத்து கட்டிடங்களையும் இணைக்கும் வகையில் ஆகாய நடை மேம்பாலம் கண்ணை கவரும் அழகிய செடி-கொடிகளுடன் அமைக்கப்பட்டு இருக்கிறது.;

Update:2023-02-01 03:47 IST

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையிடமாக செயல்படும் ரிப்பன் மாளிகை, சென்னையின் பாரம்பரியமிக்க, பழமையான கட்டிடம் ஆகும். ரிப்பன் மாளிகை வளாகத்தில் வருவாய்த்துறை, கருவூலகத்துறைக்காக தனி கட்டிடம் செயல்பட்டு வருகிறது.

இதுதவிர மாநகராட்சியின் முக்கிய துறைகளை உள்ளடக்கிய அம்மா மாளிகையும், சுகாதாரத்துறை உள்பட இதர துறைகளை உள்ளடக்கிய பசுமை கட்டிடமும் செயல்பட்டு வருகிறது. ரிப்பன் மாளிகையின் முகப்பு கட்டிடத்தில் மேயர், துணை மேயர், கமிஷனர் அலுவலகங்கள், மன்ற கூட்டம், ஆலோசனை மன்றங்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பிரிவுகள் உள்ளிட்ட முக்கிய பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

லிப்ட் வசதி இருந்தாலும், ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்துக்கு செல்வது என்பது அதிகாரிகள், குறிப்பாக பணியாளர்கள் மத்தியில் பெரும் சிரமத்துக்குரிய விஷயமாகவே இருந்து வந்தது.

ரூ.3 கோடி மதிப்பில்...

இந்த சிரமத்தை போக்கும் வகையில் 4 கட்டிடங்களையும் இணைக்கும் வகையில் ஆகாய நடை மேம்பாலம் கட்டப்பட்டது. சமீபத்தில் இந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தது.

இதன்மூலம் ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் விரைவாக சென்று பணியாற்ற முடிகிறது. கோப்புகள் மற்றும் முக்கிய பொருட்கள், அலுவலக உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதற்கும், இடமாற்றம் செய்வதற்கும் மிகவும் ஏதுவாக அமைந்திருக்கின்றன. ரூ.3 கோடியில் கட்டப்பட்ட இந்த ஆகாய நடை மேம்பாலம் 110 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட இந்த நடைபாதைகள் தற்போது அதிகாரிகள்-ஊழியர்களுக்கு பெரும் பயனை அளித்து வருகின்றன.

சூரிய ஒளி மூலம் மின்சாரம்

குறிப்பாக இந்த நடைமேம்பாலத்தின் இருபுறமும் கண்ணை கவரும் அழகிய செடி-கொடிகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. இது அந்த வழியாக நடந்து செல்வோருக்கு மன அமைதியை தருவதுடன், நேர்மறை சிந்தனைகளையும் தூண்டுவதாக அமைந்து உள்ளன. மேலும் அந்த நடைமேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகளுக்கு தேவையான மின்சாரம் பெற, அருகே சோலார் பிரிவும் வைக்கப்பட்டு இருக்கிறது. சூரிய ஒளி மூலம் பெறப்படும் மின்சாரமே இந்த நடைமேம்பாலத்தின் மின்சார தேவைக்கு வழங்கப்படுகிறது.

இப்படி அனைத்து வகையிலும் சிறப்பானதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நடைமேம்பாலம் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் தாண்டி, பல்வேறு விஷயங்களுக்காக ரிப்பன் மாளிகை வரும் பொதுமக்களையும் ஈர்த்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்