நிலம் மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

எட்டயபுரம் அருகே போலி ஆவணம் மூலம் நில மோசடி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-09-09 15:26 GMT

எட்டயபுரம் அருகே போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி செய்த வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நிலம் மோசடி

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்தவர் மயில்வாகனன். இவர் ஒரு தனியார் நிறுவனத்துக்கு எட்டயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆத்திகிணறு, போடுபட்டி, லக்கம்மாள்தேவி, புங்கவார்நத்தம், விகாம்பட்டி மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் நிலம் வாங்கி கொடுத்தாராம். இதில் நிலத்தை விற்பனை செய்ய விரும்பாத விவசாயிகளின் நிலத்தையும் போலி ஆவணம் தயாரித்து தனியார் நிறுவனத்துக்கு கொடுத்து மயில்வாகனன் மற்றும் அவரது கூட்டாளிகள் மோசடி செய்து உள்ளனர்.

குண்டர் சட்டத்தில் கைது

இது குறித்த புகாரின் பேரில் நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மயில்வாகனனை கைது செய்தனர். தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மயில்வாகனனை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.

நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 37 பேர் உள்பட 199 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்