கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் வறண்டு கிடக்கும் ஏரி, குளங்கள்
மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறந்தும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் ஏரி,குளங்கள் வறண்டு கிடப்பதால் ஆடிப்பட்டம் சம்பா சாகுபடி கைகூடுமா? என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேதுபாவாசத்திரம்:
மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறந்தும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் ஏரி,குளங்கள் வறண்டு கிடப்பதால் ஆடிப்பட்டம் சம்பா சாகுபடி கைகூடுமா? என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை திறப்பு
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை கடந்த மாதம் 12-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த காவிரி நீர் கல்லணைக்கு வந்ததடைந்தது. பின்னர் கல்லணையில் இருந்து தண்ணீர் கடந்த மாதம் 17-ந்தேதி திறக்கப்பட்டது.
மேட்டூர் அணை திறக்கப்பட்டு 30 நாட்களை கடந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடைமடைக்கு 2 நாட்கள் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து முழு கொள்ளளவான 4,500 கன அடி தண்ணீர் திறந்து விட்டால் தான் கடைமடை வரை தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.
கடைமடையை தண்ணீர் எட்டிப்பார்க்கும்
கல்லணையில் இருந்து வரும் தண்ணீர் ஈச்சன்விடுதி என்ற இடத்தில் பிரியும் வாய்க்கால் வழியாக நவக்குழி என்ற இடத்தில் புதுப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு இருபிரிவுகளாக வந்து சேருகிறது. ஈச்சன்விடுதியில் 450 கன அடி முழு கொள்ளளவு தண்ணீர் விட்டால் தான் கடைமடையை தண்ணீர் எட்டிப்பார்க்கும் முறைவைக்காமல் தொடர்ந்து 30 நாட்கள் தண்ணீர் வந்தால்தான் ஏரி, குளங்களை நிரப்ப முடியும். அதே சமயம் சம்பா சாகுபடிக்கு ஆடிப்பட்டம் நாற்று விடவும் முடியும். ஆனால் முறை வைத்து வழங்கப்படுவதாக கூறப்படும் தண்ணீர் கடைமடைக்கு 2 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
வறண்டு கிடக்கும் குளங்கள்
தண்ணீர் முறையாக கிடைக்காமல் பாசன வாய்க்கால், ஏரிகள் வறண்டு கிடக்கிறது. இதனால் ஆடிப்பட்டம் சம்பா சாகுபடி கைகூடுமா? என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து கடைமடை விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை வழக்கம் போல் ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த ஆண்டாவது சம்பா சாகுபடிக்கு நாற்றுவிட ஆடிப்பட்டம் கைக்கூடும் என விவசாயிகள் நம்பிக்கையில் இருந்தனர்.
விவசாயிகள் சாகுபடியைகூட கருத்தில் கொள்ளாமல் ஏரி, குளங்களை நிரப்ப மும்முரமாக இருந்து வருகிறோம். 500-க்கும் மேற்பட்ட சிறு,சிறு குளங்கள் மற்றும் ஊமத்தநாடு, நாடியம், கொரட்டூர், பெருமகளூர், சோலைக்காடு, விளங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய பெரிய ஏரிகள் அனைத்தும் வறண்ட நிலையிலேயே உள்ளது.
நிலத்தடி நீர்மட்டம்
மேட்டூர் அணை திறந்து 30 நாட்களை கடந்த நிலையிலும் 2 நாட்கள் மட்டுமே தண்ணீர் கடைமடையை எட்டி பார்த்துள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பினால்தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கடைமடை பகுதியில் ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பும் வரை கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தொடர்ச்சியாக தண்ணீர் விட வேண்டும்.
முறை வைக்காமல் தண்ணீர் வழங்கினால் கடந்த 8 ஆண்டுகளாக கைவிட்டு போன ஒருபோக சம்பா சாகுபடிக்கு ஆடி பட்டம் நாற்றுவிடும் பணிகளும் நிறைவடைந்துவிடும். எனவே கலெக்டர் கடைமடை பகுதிக்கு கவனம் செலுத்தி 30 நாட்களுக்கு முறை வைக்காமல் தொடர்ச்சியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.