கூலி தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கூலி தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கூலி தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
இதில் கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப்சிங், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
குறைதீர்வு நாள் கூட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மனு அளிக்க வந்தவர்களை தீவிர சோதனை செய்தனர்.
அந்த சமயத்தில் கலசபாக்கம் தாலுகா சின்னகல்லந்தல் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பழனி (வயது 52) என்பவர் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவருக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி, ஆள்மாறாட்டம் செய்து பொய் கிரையம் செய்து கொண்டு சிலர் அவரது சொத்துகளை அபகரிக்க முயற்சிப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பின்னர் அவரை போலீசார் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அரசு வேவை வழங்கக்கோரி மனு
செய்யாறு அடுத்த ஜடேரி கிராமத்தில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளி ஜெகன்நாதன் (வயது 32), பட்டதாரி. விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் விளையாட்டில் ஆர்வம் கொண்டு நீச்சல் மற்றும் கூடைப்பந்து விளையாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
சென்னையில் கூடைப்பந்தும், தேனியில் நீச்சல் பயிற்சி பெற்று மாநிலம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாரா கூடைப்பந்து மற்றும் நீச்சல் போட்டில் பங்கேற்று உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நொய்டாவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்று தங்கம் வென்றதாகவும், இதேபோல் தேசிய அளவிலும் பதக்கங்களை வென்று உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவர் தனது மனைவி பவித்ராவுடன் குறைதீர்வு கூட்டத்திற்கு தான் பெற்ற பதக்கங்களுடன் வந்து தனக்கு அரசு வேலை வழங்கக்கோரி மனு அளித்தார். இதுவரை 10 முறைக்கு மேல் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
சாகும் வரை தொடர் உண்ணாவிரதம்
குருமன்ஸ் மாநில சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் கே.முருகேசன் தலைமையில் தரடாப்பட்டு, திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம் பகுதியைச சேர்ந்த குருமன்ஸ் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்துவரும் குருமன்ஸ் பழங்குடியின மக்களுக்கு கலாசார ஆய்வு செய்யப்பட்டு அதனடிப்படையில் வழங்கப்பட்ட குருமன்ஸ் எஸ்.டி. சான்று உறவுமுறையில் வழங்க வேண்டுமென்று வருவாய்த்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவின் அடிப்படையில் சாதிச்சான்று கோரி விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உறவுமுறையில் விசாரணை மேற்கொண்டு கல்வி வேலைவாய்ப்பு பெற விரைவாக எஸ்.டி. சாதிச்சான்று வழங்க வேண்டும். மேலும் காலதாமதம் ஏற்படுமேயானால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குருமன்ஸ் பழங்குடியினர் தங்களது குழந்தைகளுடன் சாகும்வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கூலி தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.