சாலையில் கிடந்த 4 கிலோ வெள்ளிப்பொருட்களை போலீசில் ஒப்படைத்த தொழிலாளி
சங்கரன்கோவிலில் சாலையில் கிடந்த 4 கிலோ வெள்ளிப்பொருட்களை போலீசில் தொழிலாளி ஒப்படைத்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள வென்றிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவா் கூலித்தொழிலாளி நடராஜன். இவர் சங்கரன்கோவில் நகைக்கடை பஜாரில் நடந்து சென்று கொண்டு இருந்த போது, சாலையோரம் ஒரு பை கிடந்தது. அதை திறந்து பார்த்த போது, ஏராளமான வெள்ளிப்பொருட்கள் இருந்தது. அதை எடுத்து அவர் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அதில் மொத்தம் 4 கிலோ வெள்ளிப்பொருட்கள் இருந்தது. இவற்றை மதுரையை சேர்ந்த வியாபாரி முத்துக்குமார் தவறவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார், முத்துக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து முத்துக்குமாரிடம் வெள்ளிப்பொருட்களை சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர் ஒப்படைத்தார். மேலும் நடராஜனுக்கு பொன்னாடை அணிவித்து வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.