15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கிழக்கு திசை காற்று தென் இந்திய பகுதிகளில் முழுமையாக வீச இருக்கிறது. இதனால் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் பருவமழை தீவிரம் அடைய உள்ளது.
அதற்கு முன்னதாக மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக இன்று (வியாழக் கிழமை) முதல் 2-ந்தேதி (சனிக்கிழமை) வரை மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.
நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாளும் (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.