அறுவடை செய்த நெல்லை காய வைக்கும் பணி தீவிரம்

கூத்தாநல்லூாில் அறுவடை செய்த நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2023-10-25 19:15 GMT

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூாில் அறுவடை செய்த நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

அறுவடை பணிகள்

டெல்டா மாவட்டங்களின் விவசாய பணிகளுக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்டா மாவட்ட விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டனர். அதன்படி, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் முதல் போக சாகுபடியாக குறுவை நெற்பயிர் சாகுபடி பணிகளை அப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டனர்.இருப்பினும் விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கிய பிறகு, கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள வெண்ணாறு, வெள்ளையாறு, கோரையாறுகளில் தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

காய வைக்கும் பணி

பின்னர், ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வரத்தொடங்கியது. இதை பயன்படுத்தி கொண்ட அப்பகுதி விவசாயிகள் பலர் ஆற்றுத் தண்ணீர் மற்றும் பம்புசெட் வைத்து குறுவை நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது, நெற்பயிர்கள் வளர்ந்து கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் உள்ள சில இடங்களில் எந்திரம் மூலம் இரவு பகலாக அறுவடை பணிகள் நடைபெற்றன. அறுவடை நேரத்தில் மழை பெய்ததால், அறுவடை செய்யப்பட்ட நெல்களில் ஈரப்பதம் கொண்டுள்ளதால் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் சாலையோரம் மற்றும் விவசாய களங்களில், ஈரப்பதம் அடைந்த நெல்களை கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

சிரமம்

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவதுகடந்த ஆண்டும் இதே காலத்தில் குறுவை அறுவடை நேரத்தில் மழை குறுக்கிட்டு அறுவடை செய்த நெல்லை ஈரமாக்கியது. இதனால், கடந்த ஆண்டு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. கடந்த ஆண்டை போலவே தற்போது அறுவடை செய்யப்பட்ட நெல் மழையில் நனைந்து ஈரப்பதம் அடைந்து உள்ளது. இதனால் நெல்லை காய வைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்