நகைகளை விற்று விட்டு திருட்டு போனதாக நாடகமாடியது அம்பலம்
என்ஜினீயர் வீட்டில் திருட்டு நடந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் நகைகளை விற்று விட்டு திருட்டு போனதாக நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.
என்ஜினீயர் வீட்டில் திருட்டு
வேலூர் கொணவட்டம் சக்திநகரை சேர்ந்தவர் பத்ரூதின் (வயது 35), சிவில் என்ஜினீயர். இவர் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். பத்ரூதின் தாயார் மற்றும் அவருடைய மனைவி சையத் அலி பாத்திமா ஆகியோர் சக்தி நகரில் வசித்து வருகின்றனர். இருவரும் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வாலாஜாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். 2 நாட்களுக்கு பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு ஆங்காங்கே பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தன.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று வீடு, பீரோக்களை பார்வையிட்டு சையத் அலி பாத்திமா, அவருடைய மாமியார் மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் 3 வாலிபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆரணி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 20), வேலூர் முள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் என்கிற ரஞ்சித் (23) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப், செல்போன், ஒரு டேப் மற்றும் வெள்ளி கொலுசு பறிமுதல் செய்யப்பட்டது.
நாடகம்
திருடப்பட்டதாக புகாரில் கூறப்பட்ட 40 பவுன் குறித்து அவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் நாங்கள் நகைகளை திருடவில்லை என்று தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பத்ரூதீன் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து விசாரணை செய்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
பத்ருதீன் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்ததை அடுத்து வீட்டில் 40 பவுன் நகைகள் திருடப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் நகை திருடவில்லை என்றனர். தீவிர விசாரணையில் பத்ரூதீன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் ஏற்கனவே நகைகளை விற்றுள்ளனர். திருட்டு சம்பவம் நடந்த பின்னர் அக்கம் பக்கத்தினர் கூறியதன் பேரில் திருடப்பட்ட பொருட்களுடன் நகையும் திருட்டு போனதாக கூறி நாடகமாடி உள்ளனர் என்பது தெரியவந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.