கோவிலுக்கு 'சீல்' வைத்த விவகாரம்: 2-வது நாளாக பொதுமக்கள் தொடர் போராட்டம்

கரூர் அருகே கோவிலுக்கு 'சீல்' வைத்த விவகாரம் தொடர்பாக 2-வது நாளாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-06-09 19:27 GMT

திருவிழாவில் மோதல்

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே வீரணம்பட்டியில் பிரசித்தி பெற்ற காளியம்மன்-பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 7-ந்தேதி நடந்த திருவிழா நிகழ்ச்சியின்போது, அதே பகுதியில் உள்ள பட்டியலினத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கோவிலுக்குள் ெசன்று வழிபாடு செய்வதற்காக முன் மண்டபத்திற்கு வந்துள்ளார். இதற்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து அந்த வாலிபரை தடுத்ததாக தெரிகிறது. இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில், இரு தரப்பினரும் கோவிலுக்கு வெளியில் இருந்து சாமி தரிசனம் செய்து திருவிழாவை முடித்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

கோவிலுக்கு சீல்

நேற்று முன்தினம் காலை கோவிலில் இருந்து கரகம் எடுத்து விடும் நிகழ்ச்சி நடத்துவதற்தாக குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி மற்றும் குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது ஒரு தரப்பினர் கரகத்தை கோவிலுக்குள் சென்று எடுத்து வந்து கிணற்றில் கரைத்து விட்டனர்.

இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, எங்களையும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் ஒரு தரப்பினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரும் மீண்டும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.

சிறைபிடிப்பு

இதையடுத்து குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி மற்றும் அதிகாரிகள் கோவிலில் உள்ள 4 கதவுகளையும் பூட்டி சீல் வைத்தனர். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரை சுமார் 3 மணி நேரம் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோட்டாட்சியரை மீட்டு அவரது காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர். அப்போது கோட்டாட்சியரின் கார் மோதி 17 வயது சிறுமியின் கால் முறிந்தது. இதைக்கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் இரவு வரை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

2 இடங்களில் மறியல்

இந்தநிலையில் நேற்று காலை 2-வது நாளாக மீண்டும் வீரணம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி-பாளையம் மெயின் ரோட்டில் உள்ள காளியம்மன் கோவில் முன்பும், அதே சாலையில் உள்ள விராலிப்பட்டி பிரிவு ஆகிய 2 இடங்களில் சாலையின் நடுவே மரக்கட்டைகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் மறியலில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு சென்றனர். ஆனால் மறியல் தொடந்து நடந்து கொண்டு இருந்தது. ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

உடன்பாடு ஏற்படவில்லை

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, பேச்சுவார்த்தையின்போது ஊர் முக்கியஸ்தர்கள் கோவிலின் சீலை அகற்ற வேண்டும், சிறுமியின் மீது ேகாட்டாட்சியரின் கார் மோதியதால் கோட்டாட்சியர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் மாவட்ட நிர்வாகம் தரப்பில், ஒரு அதிகாரியை 3 மணி நேரம் சிறைபிடித்து வைத்தது தவறு என்றும், விபத்து எதிர்பாராத விதமாக நடந்தது என்றும், நீதிமன்றத்தின் மூலமாகவே கோவிலின் சீலை அகற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து, பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தனர்.

பதற்றம்

இதனால் வீரணம்பட்டி பகுதியில் இரவிலும் மறியல் போராட்டம் நடந்து வந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்