சர்வதேச புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி இன்று நிறைவு

ஊட்டி மலர் கண்காட்சியை 4 நாட்களில் 78 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இன்று நடக்கும் நிறைவு விழாவில் பரிசு கோப்பைகள் வழங்கப்படுகிறது.

Update: 2022-05-24 02:00 GMT

ஊட்டி:

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை விழாவை முன்னிட்டு சர்வதேச புகழ்பெற்ற 124-வது மலர் கண்காட்சி கடந்த 20-ந் தேதி தொடங்கியது. கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மலர் மாடத்தில் 35 ஆயிரம் பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டது. பூத்து குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

கோடை விழாவையொட்டி பூங்காவில் 200-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது. அந்த செடிகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனால் பூங்காவே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. குளு, குளு காலநிலையை அனுபவிக்கவும், கோடை விழாவை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

மலர் அலங்காரங்கள் முன்பு புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்கின்றனர். கண்காட்சியை ஒட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதனை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

கண்காட்சி தொடங்கிய முதல் நாளில் 12,000 பேர், 21-ந் தேதி 19,000 பேர், 22-ந் தேதி 25,000 பேர், 23-ந் தேதி 22,000 பேர் என 4 நாட்களில் 78,000 சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து உள்ளனர்.

மலர் கண்காட்சி நிறைவு விழா இன்று (செவ்வாய்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்குகிறார்.

கண்காட்சியில் சிறந்த மலர் அரங்கம், தனியார் பூங்கா, வீடு மற்றும் மாடி மலர் தோட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படுகிறது. சிறந்த பூங்காவுக்கான கவர்னர் கோப்பை, சிறந்த மலருக்கான முதல்-அமைச்சர் கோப்பையும் வழங்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்