கைதிகளுடன் உறவினர்கள் பேசுவதற்காக சேலம் மத்திய சிறையில் 'இன்டர்காம்' வசதி-கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார்
கைதிகளுடன் உறவினர்கள் பேசுவதற்காக சேலம் மத்திய சிறையில் ‘இன்டர்காம்’ தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார்.
'இன்டர்காம்' தொலைபேசி வசதி
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் இருக்கும் கைதிகளை சந்திக்க அவர்களின் உறவினர்கள் அளிக்கும் மனுக்கள் அடிப்படையில் ஏராளமானோர் அனுமதிக்கப்படுகின்றனர்.
அப்போது கைதிகள் ஒரு புறமும், அவர்களது உறவினர்கள், வக்கீல்கள் மற்றொரு புறமும் நின்று பேசும் நிலை இருக்கும். இடைப்பட்ட தூரம் அதிகமாக இருப்பதால் அவர்கள் இருதரப்பினரும் அதிக சத்துடன் கூட்ட நெரிசலில் சிக்கி பேசும் நிலைஉள்ளது.
இந்த நிலையில் கம்பி வலையின் உள்ளே நின்று கைதி தன்னுடைய உறவினரின் முகத்தை பார்த்து பேசும் வகையில் 'இன்டர்காம்' தொலைபேசி வசதி தமிழகத்தில் உள்ள சிறைகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சத்தமாக பேச வேண்டிய தேவை இருக்காது.
கலெக்டர் பார்வையிட்டார்
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரையை தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் 'இன்டர்காம்' தொலைபேசி வசதி நேற்று ஏற்படுத்தப்பட்டது. இந்த வசதியின் செயல்பாடுகள் குறித்து சிறை போலீசாருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
'இன்டர்காம்' தொலைபேசி வசதியை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார். மேலும் அவர் இந்த வசதியை பயன்படுத்தி எதிர் முனையில் இருந்தவரிடம் பேசினார். அப்போது சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் கூறும் போது, 'சேலம் மத்திய சிறையில் இன்று (நேற்று) முதல் 'இன்டர்காம்' தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கைதிகள் தங்களின் உறவினர்களிடம் 50 நிமிடம் வரை பேசலாம். மேலும் ஒரே நேரத்தில் 20 கைதிகள் பேசும் வகையில் 20 'இன்டர்காம்' வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கைதிகளை உறவினர்கள் அருகில் இருந்து பார்க்கும் வகையில் கண்ணாடி கூண்டு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.