குளச்சல் அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு
குளச்சல் அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் இறந்தார்.
குளச்சல்:
குளச்சல் அருகே கல்லுக்கூட்டத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 77). இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். கடந்த 12-ந் தேதி மாலை இவர் வீட்டின் முன் உள்ள சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திங்கள்நகரில் இருந்து குளச்சல் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மனோகரன் மீது எதிர்பாராமல் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்த ஜோபின் (22), மூலச்சலை சேர்ந்த அபீஸ் (22) மற்றும் மனோகரனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதில் ஜோபின் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஜோபின் பரிதாபமாக இறந்தார். வெளிநாடு செல்ல இருந்தநிலையில் ஜோபின் இறந்தது தெரியவந்தது. மற்ற 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.