சின்னசுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்:சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

சின்னசுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாய் குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2022-12-29 18:45 GMT

சின்ன சுருளி அருவி

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சின்னசுருளி அருவி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் 50 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த அருவிக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சின்னசுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள், அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் சின்னசுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் 2 இடங்களில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அடிப்படை வசதி

அதன்படி, மேகமலை ஊராட்சி நிர்வாகம் சார்பில், கோம்பைத்தொழு கிராமத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அங்கிருந்து அருவிக்கு செல்லும் வழியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் வனத்துறை சார்பில் நுழைவுக்கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. 2 இடங்களில் நுழைவுக்கட்டணம் வசூலித்தாலும் அதற்கு ஏற்றாற் போல அருவி பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்று சுற்றுலா பயணிகள் புகார் கூறியுள்ளனர்.

அருவிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் அருவிக்கு ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு முன்னதாகவே கார்களை நிறுத்திவிட்டு நடந்து செல்லும் நிலை உள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடம் வசதி இல்லை. அருவி பகுதியில் கண்காணிப்பு இல்லாததால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே உள்ளது. எனவே சின்னசுருளி அருவியில் அடிப்படை வசதிகளை செய்து, நுழைவுக்கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்