ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி - ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்
கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மீண்டும் திற்பரப்பு அருவியின் ஒரு பகுதியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி,
பேச்சிப்பாறை அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 6 நாட்களாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் நீர்திறப்பு குறைவு மற்றும் மழை பெய்யாததால் நேற்று காலையில் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.
அதே சமயத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இருந்த போதிலும் திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரிசெய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திற்பரப்பு அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளியை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மீண்டும் திற்பரப்பு அருவியின் ஒரு பகுதியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதிலும் இன்று தீபாவளி என்பதால் காலை முதலே திற்பரப்பு அருவி அருகே உள்ள மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மக்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். குழந்தைகள் ஆர்ப்பரிக்கும் அருவி நீரில் நீச்சல் அடித்து உற்சாகம் அடைந்தனர். மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து வருகின்றனர்.