பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-29 17:22 GMT

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அயூப்கான் தலைமை தாங்கினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவகுமார், மாவட்ட சட்ட செயலாளர் குப்பன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் விமலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் முருகன் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.

இதில் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பள்ளி இறுதி தேர்வுகள் நெருங்கும் சமயத்தில் மண்டல ஆய்வுகளை நடத்தி கற்பித்தல் பணியை முடிக்க கூடாது. ஜூலை 1-ல் இருந்து முடக்கி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை உடனடியாக நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். ஒவ்வொரு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கும் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும்.

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் அக்டோபர் மாத ஊதியம் இன்னும் வழங்கப்படாததால் அதனை விரைந்து பெற்றுத்தர கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் மாவட்ட துணைத்தலைவர் திருமால், மாநில பொதுக்குழு உறுப்பினர் மண்ணு, மாவட்ட பொருளாளர் சிவராஜ் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்